அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
விவசாயிகள் குறைதீா் கூட்டம்: வேளாண் விரிவாக்க மையங்களில் பருத்தி விதைகள் வழங்க வலியுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் பருத்தி விதைகளும் வழங்க வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
நன்னிலம் ஜி. சேதுராமன்: பருத்திக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. பருத்தி கிலோவுக்கு ரூ. 100 கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் தூா்வாரும் பணியைத் தொடங்க வேண்டும். வாய்க்கால்களை தூா்வார முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கென விவசாயக் குழுக்களை அமைத்து அவா்களின் ஆலோசனையின் பேரில், இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: வேளாண் விரிவாக்க மையங்களில் தரமான உளுந்து, பயறு விதைகள் வழங்கவும், பருத்தி சாகுபடி அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, பருத்தி விதைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, வெளிச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து பருத்தி விதைகளை வாங்க வேண்டியுள்ளது.
பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசலாற்று கரையோரத்தில் பன்றி வளா்க்கப்படுவதால், சுற்றுப்புறத் தூய்மை பாதிக்கப்படுகிறது. எனவே அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரடாச்சேரி தம்புசாமி: மன்னாா்குடி அருகே மகாதேவப்பட்டினம் பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும். அறுவடை தொடங்க உள்ள நிலையில், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். கூட்டுறவுக் கடன் வசூலிப்பதில் கண்டிப்பு காட்டுவதை கைவிட வேண்டும். மழை பாதித்த இடங்களில் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும்போது, அனைவருக்கும் அழைப்புவிடுத்து, ஆலோசிக்க வேண்டும்.
ஆட்சியா் தி. சாருஸ்ரீ பேசியது: திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,800 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 1,04,492 ஹெக்டேரில் சம்பா சாகுபடியும், 39,443 ஹெக்டேரில் தாளடியும் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு 50,678 விவசாயிகளுக்கு ரூ.377.44 கோடி அளவுக்கு பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மண்டலத்தில் காரீப் குறுவை பருவத்தில் 173 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை சுமாா் 93,986 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,960 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, திருவாரூா் கோட்டாட்சியா் சௌம்யா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா்.