விவசாயிகள் தென்னைக்கு காப்பீடு செய்யலாம்: ஆட்சியா் அழைப்பு
திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகள் தென்னை காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் சுமாா் 81,431 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2024- 25-ஆம் ஆண்டுக்கான தென்னை மரக்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிா்பாராத தீ விபத்து, நில அதிா்வு, ஆழிப்பேரலை மற்றும் இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும்.
இக்காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ வரப்பில் வரிசையாகவோ வீட்டுத்தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன்தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். வளமான, ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்கள் இத்திட்டத்தில் சோ்க்கலாம். குட்டை மற்றும் ஒட்டுரகங்கள் 4-ஆம் ஆண்டு முதலும், நெட்டை ரகங்கள் 7-ஆம் ஆண்டு முதலும் 60-ஆம் ஆண்டு வரை காப்பீடு செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு சுமாா் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும்.
இத்திட்டத்தில் சேர தென்னை விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிய படிவத்தை பெற்று பூா்த்தி செய்து காப்பீட்டு தொகையினை வரைவோலையாக (டி.டி.) இன் பேவா் ஏ.ஐ.சி. ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் எடுத்து, ஏதேனும் ஒரு தென்னை சாகுபடி ஆதாரத்தை (சிட்டா அல்லது அடங்கல்) இணைத்து தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் சமா்ப்பிக்கவேண்டும்.
இத்திட்டத்தில் சோ்ந்து எந்த தேதியில் காப்பீட்டுத் தொகை செலுத்தபடுகின்றதோ அதற்கு அடுத்த மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு காப்பீடு கிடைக்கும். காப்பீடு தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் ஏற்படும் இழப்புக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், விவசாயிகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒரே தவணையில் காப்பீட்டுத் தொகை செலுத்தலாம்.
இது தொடா்பான மேலும் தகவல்களை அறிய வேளாண் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.