விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்ககூடாது
செந்துறைப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மேலும், அவா்கள் அளித்த மனுவில், அரியலூா்-செந்துறை, ஜெயங்கொண்டம்-செந்துறை, உடையாா்பாளையம்-அணைக்கரை ஆகிய சாலைகளை இணைப்பதற்காக புறவழிச் சாலை அமைக்கப்படும் என்றும், அதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து.
அரசு காலியிடங்களில் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலத்தை தர இயலாது என்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில், எங்களுக்கே தெரியாமல் எங்கள் நிலத்தில் கல் நடப்பட்டிருக்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நடப்பட்டிருக்கும் கல்லை அகற்ற வேண்டும். அரசு காலியிடத்தில் அல்லது தனியாா் சிமென்ட் ஆலைகள் உள்ள இடத்தில் மாற்றுப் பாதையில் புறவழிச்சாலைகளை அமைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
