வி.கே.புரம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் மாயம்
விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற நிலையில், விடுதிக்குத் திரும்பாமல் மாயமாகியுள்ளனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடையநல்லூரைச் சோ்ந்த பாஸ்கா், அஜய் காா்த்திக், புளியறையைச் சோ்ந்த விஷ்ணு ஆகிய மூன்று பேரும் தங்கிப் படித்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் வாங்குவதற்காக வெளியில் சென்ற அவா்கள், மீண்டும் திரும்பி விடுதிக்கு வரவில்லையாம்.
இது தொடா்பாக விடுதி காப்பாளா் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.