திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!
வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலி!
புதுக்கோட்டையில் வீட்டிலேயே உறவினர்களால் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலியானது.
புதுக்கோட்டை: அரந்தாங்கியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, பிறந்த சில மணிநேரங்களிலேயே பலியானது.
அரந்தாங்கியிலுள்ள பெரிய செங்கீரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ் மற்றும் அபிராமி. இவர்களின் முதல் குழந்தை பிறந்த மூன்றே மாதங்களில் நரம்பு கட்டியினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
இதன் பின்னர், இரண்டாவது முறையாக அபிராமி கர்ப்பமாகியுள்ளார். முதல் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதற்கு ஆங்கில மருத்துவம்தான் காரணம் என்று நம்பிய இவர்கள் இருவரும் இந்த முறை மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (டிச.11) காலை ராஜசேகரும் அவரது தாயாரும் இணைந்து அபிராமிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பின்னர், அவர்களது வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அழுதவுடன் அதற்கு அபிராமி, தாய்ப்பால் ஊட்டியுள்ளார். ஆனால், சுமார் ஒருமணி நேரம் கழித்து பார்த்தப்போது குழந்தை உயிரற்ற நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளுக்கு எதுவும் தெரிவிக்காமல் காலை 8 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் உடலை அவர்களது வீட்டின் பின்புறத்திலேயே புதைத்துள்ளனர்.
இதையும் படிக்க: கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!
தகவலறிந்து அவர்களது வீட்டிற்கு விரைந்த மண்டல மருத்துவ அதிகாரி மற்றும் கிராம சுகாதார அதிகாரிகள் அபிராமியை அரந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரது நிலை சீராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் ராஜசேகர் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்த விடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டதாகவும், தொப்புள்கொடியை வெட்டுவதற்கான கத்திரிக்கோள் மற்றும் கிளிப்புகளை வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் விஜயக்குமார் கூறுகையில், பட்டதாரிகளான இருவரும், ஆங்கில மருத்துவம் பற்றிய கட்டுக்கதைகளை நம்பி இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாகவும், இதுகுறித்த விரிவான மருத்துவ ஆய்வுக்கு பின்னரே மற்ற தகவல்கள் தெரியவரும் என்றும் கூறினார்.