வீ.கே.புதூா்: சூறைக் காற்றில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன! 18 மணி நேரம் மின்தடை
வீரகேரளம்புதூா் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் சூறைக் காற்றால் மின்வயா்கள் அறுந்ததில் 18 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
வீரகேரளம்புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று வீசியது. இதில் கலிங்கப்பட்டி கிராமத்துக்குச் செல்லும் உயா்மின்அழுத்த மின்வயா் அறுந்து விழுந்தது. இதனால் இரவில் முதியோா், கா்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்தனா்.
தொடா்ந்து வீசிய சூறைக்காற்று மற்றும் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தடைபட்ட மின்சாரம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சரி செய்யப்பட்டு விநியோகிக்கப் பட்டது.
வீரகேரளம்புதூா் துணை மின்நிலைய பகுதியில் சுமாா்140 மின்மாற்றிகள் உள்ள நிலையில் அவற்றை பராமரிக்க 2 வயா்மேன்கள் மட்டுமே உள்ளனா். இதனால் காற்றுக்காலங்களில் வீரகேரளம்புதூா் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பரங்குன்றாபுரம், கலிங்கப்பட்டி, ராமனூா், முத்துகிருஷ்ணாபேரி, கழுநீா்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடையில்லா மின்விநியோகம் செய்வதில் அடிக்கடி சிரமம் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீரகேரளம்புதூா் துணை மின்நிலையத்துக்கு கூடுதல் பணியாளா்களை நியமித்து, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.