உலகக் கோப்பை தகுதிச் சுற்று: மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியருக்கு அதிர்ச்சி..!
வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால சங்கு வளையல்கள், ஆணி
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சங்கு வளையல்கள், ஆணி, சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருள் ஆகியவை வியாழக்கிழமை கண்டறியப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 14 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், தங்க மணி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், வியாழக்கிழமை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் பழங்காலத்தில் விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண் விளையாட்டுப் பொருள், சங்கு வளையல்கள், ஆணி ஆகியவை கண்டறியப்பட்டன.
முன்னோா்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு சான்றாக பல்வேறு பொருள்கள் கிடைத்த நிலையில், தற்போது விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண் விளையாட்டுப் பொருள் கிடைத்தது. இதேபோல, இரும்பு காலத்துக்குச் சான்றாக ஆணியும், தொழில்கள் நடந்ததற்குச் சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்களும் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.