வெல்லப்போவது அஜித் பவாரா சரத் பவாரா? - தேர்தலில் 36 இடங்களில் நேரடியாக மோதும் பவார் கட்சிகள்!
மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணியும், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடியும் பிரதானமாக போட்டியிடுகின்றன. தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 36 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. மக்களவைத் தேர்தலில் தோல்வியை தழுவிய தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சரத் பவாரும் இத்தேர்தலில் அஜித் பவாரை அடியோடி தோற்கடிக்கவேண்டும் என்ற வெறியோடு பம்பரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
மக்களவை தேர்தலில் பாராமதி தொகுதியில் தனது மகளை வெற்றி பெறச்செய்தது போன்று சட்டமன்றத் தேர்தலில் அஜித் பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவாரை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதில் சரத் பவார் தீவிரமாக இருக்கிறார். இத்தேர்தலில் அஜித் பவார் 35 எம்.எல்.ஏ-க்களை நிறுத்தி இருக்கிறார். சரத் பவார் 15 எம்.எல்.ஏ-க்களை நிறுத்தி இருக்கிறார். 2023ம் ஆண்டு ஜூலை மாதம் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தபோது அவருடன் 40 எம்.எல்.ஏ-க்கள் சென்றனர். சரத் பவாருடன் 15 எம்.எல்.ஏ-க்கள் சென்றனர். எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அஜித் பவாரின் அணியை தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவித்து கட்சியின் சின்னத்தையும் ஒதுக்கியது.
கட்சியின் பெயரை சரத் பவார் இழந்தாலும், யாரது கட்சி உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்ற போட்டி சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. அஜித் பவார் கட்சிக்கு ஏற்கெனவே பா.ஜ.க கூட்டணியில் 51 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனால் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதியில் போட்டியிடுகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை அஜித் பவாருக்கு குறைந்திருந்தாலும், இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் தொகுதியில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நேரத்தில் சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த திலிப் வல்சே பாட்டிலை எதிர்த்து அம்பேகாவ் தொகுதியில் தேவ்தத் நிகம் என்பவரை சரத் பவார் நிறுத்தி இருக்கிறார்.
இதே போன்று தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சகன் புஜ்பாலுக்கு எதிராக மாணிக்கராவ் ஷிண்டே என்பவரை நிறுத்தி இருக்கிறார். மற்றொரு ஆதரவாளரான தனஞ்சே முண்டேயிக்கு எதிராக ராஜாசாஹேப் தேஷ்முக் என்பவரை சரத் பவார் நிறுத்தி இருக்கிறார். இதே போன்று சரத் பவார் கட்சியில் முக்கிய தலைவராக கருதப்படும் ஜெயந்த் பாட்டீலுக்கு எதிராக இஸ்லாம்பூர் தொகுதியில் நிஷிகாந்த் பாட்டீல் என்பவரையும், ஜிதேந்திர அவாத்திற்கு எதிராக நஜீப் முல்லா என்பவரையும் அஜித் பவார் நிறுத்தி இருக்கிறார். இத்தேர்தல் முடிவு யாரது அணி உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்பதை நிரூபிக்கும் பலபரீட்சையாக அமைந்துள்ளது.
இத்தேர்தலில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பாராமதி தொகுதியில் தனது சகோதரர் யுகேந்திர பவாரை எதிர்த்து போட்டியிடுகிறார். அஜித் பவார் பாராமதியில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பேசிய அஜித் பவார், ''மஹாயுதி கூட்டணி வலுவாக இருக்கிறது. அமித் ஷாவுடன் கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து பேசினோம். சட்டமன்றத் தேர்தலில் மஹாயுதி கூட்டணி 175 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இம்முறை பாராமதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தங்களது பகுதியில் வளர்ச்சிப் பணிகளை விரும்புபவர்கள் புத்திசாலித்தனமாக வாக்களிப்பார்கள்.
கருத்துக்கணிப்புகள் மஹாயுதி கூட்டணி வெற்றி பெறும் என்று கூறுகின்றன. அப்படி இருக்கும்போது தவறானவர்களுக்கு வாக்களித்தால் உங்களது பகுதியில் வளர்ச்சிப்பணிகள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். நீங்கள் மஹாயுதி கூட்டணி வேட்பாளர்களை தேர்வு செய்தால் உங்களது பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதிக்கு பிரச்னை இருக்காது'' என்றார்.