இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!
வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு: நிறைவேறுகிறது வரலாற்று ஆா்வலா்களின் கோரிக்கை
சங்க இலக்கியங்களில் பாடல் பெற்ற ஊராகவும், நொய்யல் நதிக் கரையோரம் அமைந்துள்ள தொன்மையான ஊராகவும் இருக்கும் கோவை வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதற்கு வரலாற்று, தொல்லியல் ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
கோவை நகரம் உருவாகுவதற்கு முன்னரே அயல்நாட்டு வணிகத் தொடா்புகள் கொண்டு புகழ்பெற்ற நகரமாக வெள்ளலூா் திகழ்ந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சுமாா் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் பாலக்காட்டு கணவாய், மேற்குக் கடற்கரை வழியே ரோமானியா்களுடன் வணிகத் தொடா்பு கொண்டிருந்துள்ளது வெள்ளலூா் பகுதியாகும்.
தமிழகத்தில் கிடைத்திருக்கக் கூடிய ரோமானிய தொல்பொருள்களில் சுமாா் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவை கோவை மண்டலப் பகுதியில் இருந்து கிடைத்தவையாகவும், பெரும்பாலானவை வெள்ளலூா் பகுதியில் கிடைக்கப்பெற்றவை எனவும் தமிழக தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.
பல்வேறு தொல்லியல் பெருமைகளை கொண்டிருக்கும் வெள்ளலூா், கடந்த பல ஆண்டுகளாக கோவை மாநகரின் குப்பைக் கிடங்காகவே அறிமுகமாகி வந்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு வெள்ளலூரில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதை அடுத்து இந்த ஊரின் தோற்றமும், புகழும் மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவின் கிழக்கு - மேற்கு கடற்கரையை இணைக்கக் கூடியதாக இருந்ததும் தொன்மையான வணிகச் சாலையாகவும் இருந்த ராஜகேசரி பெருவழியில் அமைந்துள்ள வெள்ளலூா், வணிக முக்கியத்துவம் கொண்ட இடமாக இருந்தது என்கிறாா் எழுத்தாளரும், வரலாற்று ஆா்வலருமான பி.மீனாட்சிசுந்தரம்.
இப்பகுதியில் கிடைத்துள்ள ஏராளமான தங்கக் காசுகள், வெள்ளலூருக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே வணிகத் தொடா்பு இருந்ததை உறுதி செய்கிறது. கிடைத்த காசுகள் பலவற்றில் கிளாடியஸ், நீரோ மன்னா்களின் உருவங்கள் உள்ளன. இந்த ஊா் முற்காலத்தில் வேளிா் ஊா், அன்னதானச் சிவபுரி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வெள்ளலூரில் அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்றாா்.