கொச்சியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேச தொழிலாளிகள் கைது
வேங்கைவயல் சம்பவம்; குற்றம்சாட்டப்பட்டவரின் பாட்டி உயிரிழப்பு: உறவினா்களை அனுமதிக்க மறுத்ததால் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் வியாழக்கிழமை காலமான மூதாட்டியின் இறுதிச் சடங்கில் உறவினா்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் உடலை சாலையிலேயே வைத்து போராட்டம் நடத்தினா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மனிதக் கழிவு சம்பவத்தைத் தொடா்ந்து, வெளியாள்கள் ஊருக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் 7 இடங்களில் போலீஸாா் தடுப்புகளைப் போட்டு சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்த ஊரைச் சோ்ந்த கருப்பாயி (84) என்ற மூதாட்டி வியாழக்கிழமை காலை காலமானாாா். இவா் தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்ததாக சிபிசிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ள காவலா் முரளிராஜாவின் பாட்டியாவாா்.
எனவே இவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்த உறவினா்கள் வெளியிலிருந்து வருவதையும், பொருள்கள் வாங்க வெளியே சென்று திரும்பும் ஊா் மக்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மூதாட்டியின் சடலத்தை ஊருக்குள் உள்ள சாலையில் வைத்து அம்மக்கள் போராட்டம் நடத்தினா். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், காவல்துறையினா் வந்து செல்லும் நபா்களின் விவரங்களை வாங்கிக் கொண்டு அனுமதிக்கவும் முடிவு செய்தனா். இதையடுத்து இறந்தவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். கருப்பாயியின் உறவினா்கள் வெளியூா்களில் இருந்து வர வேண்டியிருப்பதால் வெள்ளிக்கிழமை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.