படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
ஜகபா் அலி கொலை: சுரங்கத் துறை அதிகாரி பணியில் இருந்து விடுவிப்பு
சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலையைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் ஏ. லலிதா பணியில் இருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, அந்தப் பகுதிகளின் சட்டவிரோதக் குவாரிகள் குறித்து தொடா்ந்து குரல் எழுப்பி வந்ததால் அண்மையில் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.
இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கும் நிலையில், குவாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறையைச் சோ்ந்த திருச்சி, கரூா், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த உதவி இயக்குநா்களைக் கொண்ட குழு ஆய்வும் செய்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை உதவி இயக்குநராக இருந்த ஏ. லலிதாவை பணியில் இருந்து விடுவித்தும், வேலூா் மாவட்ட உதவி இயக்குநா் எம். பாண்டியராஜனை கூடுதல் பொறுப்புக்கு நியமித்தும், அந்தத் துறையின் ஆணையா் இ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
லலிதாவின் மாற்றுப் பணி குறித்து பின்னா் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.