வேங்கைவயல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய மூவரும்தான் இந்தச் செயலைச் செய்ததாக விசாரணை அறிக்கையை அண்மையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கு, மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிகப் பயணம்!
இதையடுத்து, வழக்கு விசாரணையை மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கவும், குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் சிபிசிஐடி போலீஸாருக்கு நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, மாா்ச் 11-ஆம் தேதி குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தும் அழைப்பாணையை எடுத்துக் கொண்டு சிபிசிஐடி போலீஸாா் கடந்த புதன்கிழமை வேங்கைவயல் சென்றனா்.
மூவரின் வீடுகளிலும் குற்றம்சாட்டப்பட்டவா்கள் இல்லாத நிலையில், அவா்களின் குடும்பத்தினரிடம் அழைப்பாணையை வழங்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய ஆகியோர் விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.