வேலை செய்யும் நேரத்தைவிட பணியின் தரமே முக்கியம்! -ஆனந்த் மஹிந்திரா
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பணியாளர் நலன் சார்ந்த கருத்துகளை சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என். ஆர். நாராயணமூர்த்தி தெரிவித்திருந்ததொரு கருத்து சர்சைக்குரிய விவாதமாகியுள்ளது. “பணியாளர்கள் வாரத்தில் 70 மணி நேர பணியாற்ற வேண்டுமென்பதை வகுத்துக்கொள்ள வேண்டும்” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நாராயணமூர்த்தி.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன், எல் அண்ட் டி தலைவர் எஸ். என். சுப்ரமணியன் தெரிவித்திருந்த கருத்தும் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியிருக்கிறது. “வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்பட 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘வீட்டில் உங்கள் மனைவியை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும் உங்களால்? அதற்கு பதிலாக வேலைக்குச் செல்லலாம்’ என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், “எத்தனை மணி நேரம் பணிபுரிகிறேன் என்று என்னிடம் கேட்காதீர்; என் பணியின் தரம் எப்படி? என்பதைக் கேளுங்கள்” என்று பேசியுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
இதன்மூலம், மேற்கண்ட இரு தொழிலதிபர்களின் கருத்துகளிலும் தனக்கு உடன்பாடில்லை என்பதை பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.
ஆனந்த் மஹிந்திரா பேசியிருப்பதாவது, “எனது மனைவி அற்புதமானவர், அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.
உங்களுடைய வீட்டிலும், அதேபோல உங்கள் நண்பர்களுடனும் நீங்கள் நேரம் செலவழிக்காமல் இருந்தால், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு சரியான ஆலோசனைகள் எப்படி கிடைக்கும்?
நீங்கள் மேலாண்மை படிப்பில் ஒரு முதுநிலைப் பட்டதாரியானாலும் சரி, ஒரு பொறியியல் பட்டதாரியானாலும் சரி.., கலை, கலாசாரம் பற்றி கட்டாயம் படித்தாக வேண்டும்.
நாங்கள் கலைக்கும் கலாசாரத்துக்கும் ஆதரவு அளிக்கிறோம். ஏனெனில், இதுதான், நாம் எந்தவொரு முடிவெடுக்கும்போதும் நம் மூளையின் முழு திறனையும் செயல்பட வைத்து மேம்பட்ட முடிவுகளை எடுக்க வைக்க உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.