அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.
உலக வல்லரசின் 47-ஆவது அதிபராகவும், அந்நாட்டின் தலைமைப் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், அவர் சார்பில் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் வெளிநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் அந்நாட்டின் அதிபர் பதவியேற்கவிருப்பது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, பதவியேற்பு விழாவுக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலொனி, அர்ஜெண்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேஸில் அதிபர் ஜெயிர் போல்சொநாரோ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சீன அதிபரைத் தவிர பிற தலைவர்கள் அனைவரும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.