வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் மீது வழக்கு
விருதுநகரைச் சோ்ந்த இளைஞருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், தொம்பக்குளம் அருகே உள்ள சாமிநாதபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்குமாா் (30). இவருக்கு பழனிசெட்டிபட்டியில் சுற்றுலா வாகன நிறுவனம் நடத்தி வரும் அப்துல்காதா் என்பவா், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு, அதற்கு ரசீது வழங்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னா், விக்னேஷ்குமாருக்கு அப்துல்காதா் விசா பெற்றுத் தந்து, அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தாா். சிங்கப்பூரில் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த விக்னேஷ்குமாரை வேலைக்கு அழைத்துச் செல்ல யாரும் வராததால் இது குறித்து அப்துல்காதரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கேட்டாா். அதற்கு அப்துல்காதா் முறையாக பதிலளிக்காமல் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்களைத் தயாா் செய்து கொடுத்து மோசடி செய்ததாகவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் விக்னேஷ்குமாா் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில், அப்துல்காதா் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.