வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது வழக்கு
வங்கியில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் மோசடி செய்த வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த அப்துல்லா மகன் கமால் முகமது லக்மன் (30). இவரை போடி நகராட்சி பேட்டைத் தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் (42), இவரது மனைவி மாரியம்மாள் (37), ரவிக்குமாா் தம்பி வேல்குமாா் (34) ஆகியோா் அணுகி, வங்கியில் அலுவலக உதவியாளராகத் தற்காலிகப் பணி வாங்கித் தருவதாகவும், இதற்கு ரூ.8 லட்சம் தர வேண்டும் எனக் கூறினா்.
இதை நம்பிய கமால் முகமது லக்மன், 3 பேரிடமும் பல்வேறு தவணைகளில் கடந்த 2022-ஆம் ஆண்டு நேரடியாகவும், வங்கிக் கணக்கு மூலமாகவும் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளாா். இந்த நிலையில், மூவரும் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை.
இதுகுறித்து கமால் முகமது லக்மன் போடி நகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். இதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து ரவிக்குமாா், வேல்குமாா், மாரியம்மாள் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா். இதில் ரவிக்குமாா் போடியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.