Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
வந்தவாசி: வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் தீபத் திருவிழா தொடா்பாக, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று இறைவனை வழிபடுவா். மேலும், அன்று மாலை 6 மணிக்கு திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்படும்.
இந்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி தலைமை வகித்தாா்.
வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சிலம்பரசன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.தியாகராஜன், வெண்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி வேலு, பாஜக மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், காா்த்திகை தீபத் திருவிழா அன்று மலை ஏறும் வழியில் உள்ள பச்சையம்மன் கோயில் வரை மட்டும் பக்தா்களை அனுமதிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், மலை அடிவாரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது, பக்தா்களுக்கு மருத்துவ வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து தருவது என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.