ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோவிலுடையான் திருக்கோயில் பிரம்மோற்சவம் : களைகட்டிய செப்புத் தேரோட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ர சாயி திருக்கோயில் பிரசித்திபெற்றது. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் என்னும் பெருமை கொண்டது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இங்குள்ள வடபத்ரசாயி சந்நிதி மிகவும் பழைமையானது. ஆண்டாள் பெருமாளுக்கு சூடிக்கொடுத்தது சுடர்கொடியான லீலைகள் நடந்த தலமும் இதுவே. அப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம் மற்றும் புரட்டாசி பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24 - ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதையொட்டி தினமும் காலையும் மாலையும் வாகன சேவைகள் சிறப்பாக நடைபெற்றன. உற்சவத்தின் 9 -ம் திருநாளான இன்று முக்கிய நிகழ்வான செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி ஸமேத ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் இன்று காலை திருத்தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். பக்தர்கள், 'கோவிந்தா' கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனார். செப்புத்தேரானது நான்கு ரத வீதிகள் சுற்றி வந்து நிலையத்தை அடைந்தது.