ஹமாஸ் தலைவர் படுகொலை: வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்!
ஈரான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படையினரின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றது இஸ்ரேல் ராணுவம்தான் என்பதை முதல்முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது இஸ்ரேல். இஸ்மாயில் ஹனியேவை தொடர்ந்து, காஸாவில் ஹமாஸின் அடுத்தக்கட்ட தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் இஸ்ரேல் ரானுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியிருப்பதாவது, “யேமன் நாட்டிலுள்ள ஹௌதி ஆயுதப்படையின் உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நிகழ்த்தி அழிக்கும். இஸ்மாயில் ஹனியே, சின்வார், நஸ்ரல்லாவை நாங்கள் கொன்றது போலவே, ஹௌதி படைத் தலைவர்களின் தலைகளை நாங்கள் அறுத்தெறிவோம்” என்று ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது, “இப்போது ஹௌதி பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு ஒரு தெளிவான தகவலை பகிர்கிறேன். நாங்கள்(இஸ்ரேல்) ஹமாஸை, ஹிஸ்புல்லாக்களை வீழ்த்தியுள்ளோம். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கியுள்ளோம், அவர்களின் ஆயுத தயாரிப்பு அமைப்புகளை சேதப்படுத்தியுள்ளோம்.
அதேபோல, சிரியாவில் அஸாத்தின் ஆட்சியை கவிழ்த்துள்ளோம். தீவினை செய்வோருக்கு எதிராக மரண அடியை நாங்கள் கொடுத்து வருகிறோம். கடைசியாக இப்போது நிலைத்திருக்கும் யேமனில் உள்ள ஹௌதி பயங்கரவாத அமைப்புக்கும் தக்க பதிலடி கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.