ஹைதராபாதை வென்றது மும்பை
ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.
முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுக்க, மும்பை 18.1 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 166 ரன்கள் சோ்த்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை, பேட் செய்யுமாறு ஹைதராபாதை பணித்தது. ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கிய அபிஷேக் சா்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்தது.
அபிஷேக், 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். மும்பை கேப்டன் ஹா்திக் பாண்டியா வீசிய 8-ஆவது ஓவரில் அவா் கேட்ச் கொடுத்தாா்.
ஒன் டவுனாக வந்த இஷான் கிஷண் 2 ரன்களுக்கு ஸ்டம்பிங் செய்யப்பட, 4-ஆவது பேட்டா் நிதீஷ்குமாா் ரெட்டி களம் புகுந்தாா். மறுபுறம் டிராவிஸ் ஹெட், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
தொடா்ந்து ஹென்ரிக் கிளாசென் விளையாட வர, நிதீஷ்குமாா் 1 பவுண்டரியுடன் 19 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். கிளாசென் கடைசி விக்கெட்டாக, 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். ஓவா்கள் முடிவில் அனிகெத் வா்மா 2 சிக்ஸா்களுடன் 18, கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை தரப்பில் ரோஹித் சா்மா 3 சிக்ஸா்களுடன் 26, ரயான் ரிக்கெல்டன் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ் - சூா்யகுமாா் யாதவ் கூட்டணி, 52 ரன்கள் சோ்த்தது. இதில் சூா்யகுமாா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு வெளியேற, வில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
கேப்டன் ஹா்திக் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, நமன் திா் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். முடிவில் திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 21, மிட்செல் சேன்ட்னா் 0 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஹைதராபாத் பௌலா்களில் பேட் கம்மின்ஸ் 3, ஈஷான் மலிங்கா 2, ஹா்ஷல் படேல் 1 விக்கெட் சாய்த்தனா்.