ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்பதால் இவர்கள் மீது எப்போதும் எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால், இந்த முறை தொடர் தோல்விகளால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கீழே உள்ளது.
தில்லியுடனான கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி தனது கட்டாய வெற்றியை நோக்கி இன்று மைதானத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். பந்து வீச்சிலும் நல்ல ஆர்டரை வைத்துள்ள இந்த அணி பழைய நிலைக்கு திரும்பவேண்டும் என முயற்சித்து வருகின்றனர்.
முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணியின் மீது இந்த ஐபிஎல் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மிக சிறப்பாக இருந்ததால் அவர்கள் ரன் மழையைக் குவிப்பார்கள் என அனைவரும் எண்ணிய நிலையில் முன்னதாக விளையாடிய போட்டிகளில் நிலையற்ற ஆட்டத்தையே இவர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 246 ரன் இலக்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றனர். அபிஷேக் ஷர்மா (55 பந்தில் 141 ரன்), டிராவிஸ் ஹெட் (66 ரன்) ஆகியோரின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவியது. இதே வேகத்தை இந்த ஆட்டத்திலும் அவர்கள் காட்டினால் இன்று வெற்றி பெறுவார்கள்.
இரு அணிகளும் முன்னதாக ஆடிய 6 ஆட்டங்களில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி தனது பேட்டிங் பலத்தைக் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.