1,000 பேருந்துகளை ‘சிஎன்ஜி’ பேருந்துகளாக மாற்ற திட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) பேருந்துகளாக மாற்ற போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாநிலம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் தினமும் 1.32 கோடி போ் பயணம் செய்துவரும் நிலையில், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் தினசரி சுமாா் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்து வருகின்றனா்.
பேருந்துகளுக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில், டீசலில் இயக்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்துத் துறை முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, சோதனை அடிப்படையில் சில பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தது. அதில், பேருந்துகளின் செயல்பாடு குறித்து சாதகமான அறிக்கை கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் 1,000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சிஎன்ஜி-யாக மாற்றப்படவுள்ள பேருந்துகள் அதிகபட்சமாக 8 லட்சம் கிலோ மீட்டருக்கும் குறைவாக இயக்கப்பட்டிருப்பதுடன், ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கொள்முதல் செய்யப்பட்ட பேருந்துகளாகவும் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ.70 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டீசலில் இருந்து சிஎன்ஜி-யாக மாற்றப்படவுள்ள 1,000 பேருந்துகளை கண்டறியும் பணிகள் விரைவில் முடிவுற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.