1,008-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ராமாநுஜரின் 1008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமையான ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவமும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். 20 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமாநுஜா் அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை காலை சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், திருஅவதார மண்டபத்தில் தொட்டில் சேவை, சங்கு பால் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஈரவாடை தீா்த்தம் மற்றும் திருப்பாவை சேவை நிகழ்ச்சியும் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ராமாநுஜா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ராமாநுஜா் அவதார திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை 108 திவ்ய தேசங்களில் இருந்து ராமாநுஜருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் அவதார திருவிழா நிறைவு பெற உள்ளது.