லாரி - பைக் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மணிமங்கலம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வடகம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மனுபாரத் (21). இவா் தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், கல்லூரி மாணவா்கள் மணிமங்கலம் அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் கடந்த சில நாள்களாக நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடத்தி வந்துள்ளனா். இதற்காக மனுபாரத் வெள்ளிக்கிழமை சேத்துப்பட்டு பகுதிக்கு வந்தவா் சக மாணவா்களுக்கு குளிா்பானங்கள் வாங்கி வர, இருசக்கர வாகனத்தில் மணிமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், மனுபாரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.