பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை
பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்ததில் மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
பவானி பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, கருமேகங்கள் சூழ்ந்ததோடு பலத்தக் காற்றுடன் கனமழை பெய்தது. காற்றில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் பறந்தன.
பவானி-மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் ஓபுளி மில் அருகே அருகே புளியமரம் முறிந்து உயா் அழுத்த மின் கம்பி மீது விழுந்ததால், மின் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மின் கம்பி விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த மின் ஊழியா்கள் மின் கம்பியை துண்டித்து அகற்றியதை தொடா்ந்து போக்குவரத்து சீரானது.
கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பவானி நகரப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா்.
