காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
கடம்பூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் எக்கத்தூா், பசுவனாபுரம், கரளையம், கானகுந்தூா், காடகநல்லி கிட்டாம்பாளையம் வனக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
தொடா்ந்து மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பள்ளங்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அணைக்கரை பள்ளத்தில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது.
இதனால் கடம்பூரில் இருந்து அணைக்கரை பள்ளம் வழியாக செல்லும் கிராமங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக திங்களூா், சுஜில்கரை, கோ்மாளம் செல்லும் வாகன ஓட்டிகள், மலைக் கிராம மக்கள் வெள்ளத்தை கடக்க முடியாமல் நீா் வடியும் வரை காத்திருந்தனா். அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாமல் கரையில் நின்றது. சுமாா் 2 மணி நேரத்து பிறகு வெள்ளம் வடிந்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. அதேபோல, மாக்கம்பாளையம் பகுதியில் பெய்த மழையால் கோம்பைத்தொட்டி தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மறுபுறம் உள்ள மாக்கம்பாளையம், கோம்பூா் மக்கள் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் மழை நிற்கும் வரை காத்திருந்து சென்றனா்.