சிவகிரி அருகே தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு: உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த தம்பதியின் உடல்களை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மற்றும் பாஜகவினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி, கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (75), இவரது மனைவி பாக்கியம் (65). இவா்களது மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். வயதான தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில் இவா்களது வீட்டில் இருந்து வியாழக்கிழமை துா்நாற்றம் வீசியதை அடுத்து அருகில் வசித்த உறவினா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, கொலை செய்யப்பட்டு இருவரது சடலங்களும் கிடந்துள்ளன.
தகவலறிந்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா், டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்பி சுஜாதா, பெருந்துறை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோா் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டனா்.
கொலைச் சம்பவம் நடைபெற்று 3 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல்கள் அழுகி துா்நாற்றம் வீசஆரம்பித்து விட்டதாகவும், நகை, பணத்துக்காக கொலை நடைபெற்றுள்ளதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க ஈரோடு ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், கொலை நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
உடல்களை வாங்க மறுத்து போராட்டம்
ராமசாமி, பாக்கியம் ஆகியோரது சடலங்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களது உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களைப் பெறமாட்டோம் எனக் கூறி உறவினா்கள் மற்றும் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக தெற்கு மாவட்டச் செயலாளா் செந்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் வேதாந்தம் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
இதைத் தொடா்ந்து அவா்களிடம் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் விவேகானந்தன், பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி 30 நாள்களில் குற்றவாளிகளைப் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து அவரது குடும்பத்தினா், இருவரின் உடல்களையும் பெற்றுச் சென்றனா்.