சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!
'சீசனின் ஆகச்சிறந்த பேட்டர்; சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
'சீசனின் ஆகச்சிறந்த பேட்டர்!'
நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஆகச்சிறந்த பேட்டராக உருவெடுத்து நிற்கிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன். ஆடியிருக்கும் 10 போட்டிகளில் 504 ரன்களை எடுத்திருக்கிறார். சாய் சுதர்சனின் சீரான ஆட்டத்தைப் பார்த்து முன்னாள் வீரர்கள் வியந்து போய் நிற்கின்றனர். சாய் சுதர்சன் மூன்று பார்மட்டுக்குமான வீரர். அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எடுக்க வேண்டும் என ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? வழக்கமாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும். அதாவது, ஐ.பி.எல் பார்மை முன்வைத்து ஒரு வீரருக்கு எப்படி டெஸ்ட் போட்டியில் இடம் கொடுக்கலாம் என்பதுதான்! அந்த விமர்சனம் சாய் சுதர்சனுக்கும் பொருந்துமா?
சாய் சுதர்சனின் ஆட்டத்தை மெச்சத்தகுந்ததாக மாற்ற வைப்பது அவரின் கன்ஸிஸ்டன்சிதான். அவர் பெர்பார்ம் செய்யாத போட்டிகளே இல்லை எனும் அளவுக்கு ஆடியிருக்கிறார். ஐ.பி.எல் இதுவரைக்கும் டக் அவுட்டே ஆனதில்லை. சிங்கிள் டிஜிட் ஸ்கோர்களையே குறைவாகத்தான் எடுத்திருக்கிறார். டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை எடுத்த சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
'சாய் சுதர்சனின் ரெட் பால் அனுபவம்!'
ஆனால், இதற்காக மட்டுமே சாய் சுதர்சனை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எடுக்க வேண்டும் என கூறவில்லை. அப்படிக் கூறினால் அது நியாயமாகவும் இருக்காது. ஆனால், சாய் சுதர்சன் டி20 போட்டிகளை கடந்தும் பல தொடர்களிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார்.
தமிழக அணிக்காக சமீபத்திய ரஞ்சி தொடரில் இரட்டைச்சதம் அடித்திருந்தார். துலீப் டிராபியில் சதம் அடித்திருந்தார். இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா சென்ற போது இந்திய A அணி அங்கே பயிற்சிப் போட்டிகளில் ஆடியது.

அந்த இந்திய A அணியில் சாய் சுதர்சனும் இருந்தார். ஒரு போட்டியில் சதமும் அடித்தார். அதேமாதிரி, சாய் சுதர்சனுக்கு இங்கிலாந்தில் ஆடிய அனுபவமும் இருக்கிறது. கவுண்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக ஆடியிருக்கிறார். அங்கேயும் சதமடித்திருக்கிறார்.

'வாய்ப்பு கிடைக்குமா?'
ஆக, டி20 போட்டிகளில் மட்டுமில்லை. ரெட் பால் கிரிக்கெட்டிலும் கிடைத்த அத்தனை வாய்ப்புகளிலும் சாய் சுதர்சன் சாதித்து காண்பித்திருக்கிறார். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சனை எடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் உச்சக்கட்ட பார்மில் இருக்கும் ஒரு வீரரை சரியான சமயத்தில் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.