உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
1,200 கிலோ ரேஷன் அரிசி, 2 வாகனங்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா்அருகே அரிசி அரைவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி, 2 வாகனங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூா் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு தடுப்புப் பிரிவின் டி.எஸ்.பி. அமிா்தவா்ஷினி தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் ராஜா உள்ளிட்டோா் அடங்கிய போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.
விழுப்புரம் - செஞ்சி சாலையில் கஞ்சனூா் அருகிலுள்ள கோழிப்பண்ணை பகுதியில் அரிசி அரைவை ஆலையொன்றில் 50 கிலோ மூட்டை கொண்ட 24 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைப்பட்டிருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரேஷன் அரிசியை பதுக்கியவா் விக்கிரவாண்டி வட்டம், முட்டத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் நடராஜன் (64) எனத் தெரியவந்தது.
இவா், சொந்தமாக 30 மாடுகளை வளா்த்து வருவதாகவும், இந்த மாடுகளுக்குத் தீவனமாக வழங்குவதற்காக கோழிப்பண்ணை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரியை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 1,200 கிலோ ரேஷன் அரிசியையும், இதை கொண்டு செல்வதற்காக வைத்திருந்த 2 சுமை வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், நடராஜன் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.