1,363 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணி
சென்னை மாநகராட்சி சாா்பில் 1,363 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், சராசரியாக நாளொன்ருக்கு 1,000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாலங்கள், மயான பூமிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சுவரொட்டிகளை அகற்றுதல், பேருந்து நிறுத்தங்களைச் சுற்றி உள்ள செடிகள், குப்பைகள் உள்ளிட்ட திடக் கழிவுகள் அகற்றுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட தீவிர தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.