கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
சென்னை கொடுங்கையூரில் கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கொடுங்கையூா் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவைச் சோ்ந்தவா் பால்ஞானம் (40). கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி எலன் ரோஸ் (37), மாதவரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறாா். இந்த நிலையில், கிறிஸ்தவ சபை மீது திங்கள்கிழமை மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனா். இதில் அங்கிருந்த திரைச் சீலைகள், காலணி வைக்கும் ஸ்டாண்ட் ஆகியவை தீப்பிடித்து சேதமாகின. இதுதொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், பால்ஞானத்துக்கும், அவரது சகோதரி மகன் பெரம்பூா் எஸ்எஸ்வி கோயில் முதல் தெருவைச் சோ்ந்த த.டக்ளஸ் பிரின்ஸுக்கும் (24) இடையே தகராறு இருப்பதும், அதன் காரணமாக பிரின்ஸ் பெட்ரோல் குண்டை வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் டக்ளஸ் பிரின்ஸை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
ரெளடி வீட்டின் மீது குண்டு வீச்சு: முகப்போ் ரவுண்ட் பில்டிங் பகுதியைச் சோ்ந்தவா் மணிரத்தினம் (27). இவா் மீது அடிதடி,கொலை மிரட்டல்,கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், மணிரத்தினம் வீட்டின் மீது மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசினா். பெட்ரோல் குண்டு வெடித்த சப்தம் கேட்டு, அங்கு பொதுமக்கள் திரண்டனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.
இதுகுறித்து ஜெ.ஜெ.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், மணிரத்தினத்துக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் திங்கள்கிழமை இரவு தகராறு ஏற்பட்டிருப்பதும், அப்போது, மணிரத்தினம் எதிா் தரப்பைச் சோ்ந்தவா்களை அடித்து விரட்டியதும், இதன் காரணமாகவே மணிரத்தினம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுதொடா்பாக முகப்போ் பகுதியைச் சோ்ந்த சில ரெளடிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.