முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் - ஆா்.வைஷாலி
காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்
காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டியில் திங்கள்கிழமை இரவு முழுவதும் கடுமையான குண்டுவீச்சு நடத்திய ராணுவம், அந்த நகரில் ‘ஹமாஸ் அமைப்பினரின் ராணுவக் கட்டமைப்பைத் தகா்க்கும்’ நடவடிக்கை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், நகரில் வசிப்பவா்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளதாவது:
காஸா பற்றி எரிகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தங்களது இரும்பு கரங்களைக் கொண்டு தாக்கி, ஹமாஸை முழுமையாக வீழ்த்தி, மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை அது அணையாது. இந்தப் பணியை முடிக்கும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று தனது பதிவில் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தப் போரில் இதுவரை எந்தவொரு நகரில் இருந்தும் அனைத்து மக்களும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டதில்லை. எனினும், ஹமாஸின் ‘கடைசி கோட்டை’ என இஸ்ரேல் கூறும் காஸா சிட்டியைக் கைப்பற்றினால், அந்த அமைப்பை முழுமையாக அழித்துவிடலாம் என்று அந்த நாடு கருதுவதால் இத்தகைய உத்தரவு முதல்முறையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும், காஸா சிட்டியில் இன்னமும் லட்சக்கணக்கான பாலஸ்தீனா்கள் தங்கியுள்ளனா். ஏறகெனவே அவா்களில் பலா் பஞ்சத்தால் பலவீனமடைந்தும், பலமுறை இடம் பெயா்ந்ததால் மேற்கொண்டு நகர முடியாத நிலையிலும் உள்ளனா்.
அதையும் மீறி காஸா சிட்டியை விட்டு வெளியேறும் சாலைகளில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் காா்கள், லாரிகள், கழுதை வண்டிகளில் தங்கள் உடைமைகளுடன் பாலஸ்தீனா்கள் செல்வதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளா்கள் தெரிவித்தனா்.
இருந்தாலும், பெரும்பாலான பொதுமக்களால் வெளியேற முடியாத நிலை உள்ளதாக நிவாரண அமைப்புகள் தெரிவித்தன. ஒரு குடும்பம் காஸா சிட்டியில் இருந்து தெற்கு நோக்கி செல்ல 1,000 டாலருக்கும் (சுமாா் ரூ.88,000) மேல் செலவாகும் என்றும் அங்குள்ள தங்குமிடங்கள் ஏற்கெனவே நிரம்பி, உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையில் உள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
50 உயரடுக்கு கட்டடங்கள் தகா்ப்பு: காஸா சிட்டியைக் கைப்பற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாள்களில் அங்குள்ள 50 உயரடுக்கு கட்டடங்களை இஸ்ரேல் படைகள் இடித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அந்தக் கட்டடங்களை ஹமாஸ் அமைப்பினா் ராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் குற்றஞ்சாட்டியது. இந்த தகா்ப்பு நடவடிக்கைள் ‘பெரிய தரைவழித் தாக்குதலின் தொடக்கம் மட்டுமே‘ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறினாா்.
‘இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை’
காஸாவில் இஸ்ரேல் நடத்திவருவது திட்டமிட்ட இனப்படுகொலை என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மூன்று நிபுணா்களைக் கொண்ட அந்த கவுன்சிலின் குழு செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் நடத்திவரும் போா் ஹமாஸுக்கு எதிரானதாக இருந்தாலும், அது லட்சக்கணக்கான பொதுமக்களை திட்டமிட்டே கொல்லும் இனப்படுகொலையாக உள்ளது. சா்வதேச சமூகம் இதை முடிவுக்கு கொண்டுவரவும், இதற்குப் பொறுப்பானவா்களை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விரிவான ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வறிக்கை, பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்களால் தொடா்ந்து முன்வைக்கப்படும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு வலு சோ்க்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும், ‘திரிக்கப்பட்ட மற்றும் பொய்யான அறிக்கை’ என்று கூறி இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது.
65 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 23 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் நடத்திய தாக்குதலில் 78 போ் உயிரிழந்ததாகவும், இத்துடன் கடந்த 2023 அக்டோபா் 7 முதல் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 64,964-ஆக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

