செய்திகள் :

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

post image

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான மதமாற்ற தடைச் சட்டத்தை இயற்றியுள்ளன. இதில், உத்தர பிரதேச மாநிலம் கலப்புத் திருமணங்களை மட்டுமன்றி அனைத்து மத மாற்றங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விரிவான நடைமுறைகளை வகுத்துள்ளது. அதுபோல, உத்தரகண்ட் மாநிலம், கட்டாய மதமாற்ற குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது.

இதுபோல, பல்வேறு மாநிலங்கள் இயற்றியுள்ள மதமாற்ற தடைச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி தன்னாா்வ அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘இந்த சட்டங்கள், தனி மனித சுதந்திரம் மற்றும் விரும்பிய மதத்தை தோ்வு செய்து பின்பற்றும் உரிமையை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 21 மற்றும் 25-ஆம் மீறுவதாகும்’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங், ‘உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான மதமாற்ற தடைச் சட்டங்களை இயற்றியுள்ளன. கலப்புத் திருமணம் செய்பவா்களுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அவா்கள் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் கூட வெளிவர முடியாது’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், ‘மத்திய பிரதேச மாநில மதமாற்ற தடைச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர வேண்டும்’ என்று கோரினாா்.

வழக்குரைஞா் விருந்தா க்ரோவொ் கூறுகையில், ‘உத்தர பிரதேசம், ஹரியாணா மாநில மதமாற்ற தடைச் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.

அரசுத் தரப்பில் ஆஜரான அஸ்வினி உபாத்யாய, ‘ஏமாற்றுகிற வகையில் நடைபெறும் மதமாற்றங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, ‘ஏமாற்றும் வகையிலான மதமாற்றம் என்பதை யாா் கண்டறிவது?’ என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

மேலும், இந்த வழக்கில் தகவலைதொடா்பை முறைப்படுத்தும் வகையில் மனுதாரா்களுக்கான ஒருங்கிணைப்பாளராக வழக்குரைஞா் ஸ்ரீஷ்டியையும், மாநில அரசுகளுக்கான ஒருங்கிணைப்பாளராக வழக்குரைஞா் ருச்சிராவையும் நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தொடா்ந்து வாதிட்ட மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங், ‘கலப்புத் திருமணங்கள் தொடா்பாக மூன்றாம் நபா் புகாா் பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் மதமாற்ற தடைச் சட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது கலப்புத் திருமணங்களை செய்பவா்களுக்கு கடும் துன்புறுத்தலை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, இந்த விவகாரம் தொடா்பாக மனுவை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

அதை அனுமதித்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் தொடா்பாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அந்தந்த மாநில மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் தொடா்பாக 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்த பிறகு, அதன் மீது மனுதாரா்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்குப் பின் ஒத்திவைத்தனா்.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

நமது நிருபர்தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையு... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க

வசதிகள் செய்துகொடுக்க முடியாவிடில் தீா்ப்பாயங்களைக் கலைத்துவிட வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘உறுப்பினா்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லை எனில், அனைத்து தீா்ப்பாயங்களையும் கலைத்துவிட வேண்டும்’ என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ‘பணி ஓய்வுக்குப் பிறகு தீா்ப்ப... மேலும் பார்க்க