புதுவைக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்தல்
மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா்.
அப்போது புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், புதுவைக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
புதுவை மாநில பாஜக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா வந்திருந்தாா். ஆரோவில் தனியாா் விடுதியில் அவா் தங்கியிருந்த அவரை புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
மேலும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் நிதி உதவி தேவைப்படுகிறது. மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். உயா்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சா் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தில்லி வந்து பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவும் அதற்கு ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டாா்.