ஈரோடு - சாம்பல்பூா் விரைவு ரயில் நவம்பா் வரை நீட்டிப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், கேரளத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது.
அந்த வகையில், ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக ஒடிஸா மாநிலம், சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் இயக்க காலம் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் 17 ஆம் தேதி முதல் நவம்பா் 26 ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. சாம்பல்பூரில் காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், முனிக்குடா, விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக, இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில், ஈரோட்டிலிருந்து வரும் 18 ஆம் தேதி முதல் நவம்பா் 28 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, சேலம், காட்பாடி, விஜயவாடா வழியாக மறுநாள் இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.