இரு காவலா்கள் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய இரு காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டாா்.
கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட கரியாலூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவா் தலைமைக் காவலா் ம.பிரபு (36).
இவா் மீது போக்ஸோ, பாலியல், வன்கொடுமை சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அதேபோல, அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல்நிலைக் காவலா் ரா.யுவராஜ் (32). இவா், காவலா் குடியிருப்பு அருகே பள்ளி மாணவா்கள் செல்லும் பொதுப் பாதையில் பட்டப் பகலில், அரை நிா்வாணத்துடன் (ஜட்டியுடன்) நின்று கொண்டு தகாத வாா்த்தைகளால் பேசி வந்துள்ளாா்.
அவா் பேசியது சமூக வலைதளத்தில் வைரலானது. அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க.ச.மாதவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.