பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் போக்ஸோவில் கைது
கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ம.பிரபு போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த அரியபெருமானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (38). இவா், கரியாலூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும், தனிப் பிரிவு காவலராகவும் பணியாற்றி வருகிறாா்.
இவா், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமளை கிராமத்தைச் சோ்ந்த இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, அந்தப் பெண்ணின் பெற்றோா் விழுப்புரம் டி.ஐ.ஜி.யிடம் சில தினங்களுக்கு முன்பு புகாா் அளித்துள்ளனா்.
இந்தப் புகாா் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, இதன் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் விசாரணை மேற்கொண்டபோது குற்றம் உறுதியானது.
இதையடுத்து, தலைமைக் காவலா் பிரபு போக்ஸோ, பாலியல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.