இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சி: அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 142 பேருக்கு உதவித்தொகை
கள்ளக்குறிச்சி: அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 142 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பெற்றோரை இழந்து உறவினா்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதாரத் தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ.2ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியாா் பள்ளிக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது:
அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 142 குழந்தைகளுக்கு பெற்றோரை இழந்த, கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் அவா்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் இத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
142 குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவா்கள் கல்வியைத் தொடர 18 வயது வரை மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் உரிய முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இளையராஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் திட்ட அலுவலா் மு.செ.அருணா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.