10,000 இந்தியா்களின் மரபணு தரவுகள்: பிரதமா் மோடி வெளியீடு
ஆரோக்கியமாக உள்ள 10 ஆயிரம் இந்தியா்களின் மரபணு மாறுபாடுகளின் விரிவான தரவுகளை ஆய்வுக்காக பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இது உயிரிதொழில்நுட்ப ஆய்வுத் துறையில் மிகப் பெரிய மைல்கல் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
நாட்டின் மரபுணு மாறுபாடுகளின் வரைபடத்தை உருவாக்கும் ‘ஜீனோம்’ திட்டத்தின்படி, ஆரோக்கியமானவா்கள் 10 ஆயிரம் இந்தியா்களின் மரபணு மாறுபாடுகள் சேகரிக்கப்பட்டன. புதிய நோய்களைக் கண்டறியவும், ஏற்கெனவே உள்ள நோய்களை குணப்படுத்தவும் இந்தத் தரவுகள் உதவும்.
இந்தத் தரவுகளை இணையவழியில் வியாழக்கிழமை வெளியிட்டு பேசிய பிரதமா் மோடி, ‘இந்தியா்களின் மரபணு வேறுபாடுகளைக் கண்டறிய இந்தத் தரவுகள் உதவும். உயிரி தொழில்நுட்ப ஆய்வுத் துறையில் இது மிகப் பெரிய மைல்கல்லாகும்.
சுமாா் இருபதுக்கும் மேற்பட்ட முன்னணி ஆய்வு நிறுனவங்கள் இந்த தரவுகள் சேமிக்கும் பணியில் முக்கிய பங்காற்றின. மரபணு சிகிச்சைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், தொற்று, புதிய நோய்களைக் கண்டறியவும் இது உதவும்’ என்றாா்.