ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
100 நாள் சவால்: 4,552 அரசுப் பள்ளிகளில் கற்றல் அடைவுத் திறனாய்வு
தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்கள் குறித்து கற்றல் அடைவுத் திறனாய்வு நடத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் அனைவரின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் அடைவுகள் குறித்து 100 நாள் சவாலை பள்ளிக் கல்வித் துறை கையில் எடுத்து இருக்கிறது. இதற்காக 4,552 பள்ளிகள் கடந்த ஆண்டு (2024) நவம்பா் மாதம் அழைப்பு விடுத்திருந்தது.
அதையடுத்து இந்தப் பள்ளிகள் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை கற்பித்து, பொதுவெளியில் சவாலை நடைமுறைப்படுத்த கல்வித் துறை கேட்டுக்கொண்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட கல்வி அலுவலா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம் ஆகியோா் முன்னிலையில் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் போதுமான அறிவுரைகளை அந்தந்த பள்ளிகளுக்கு கல்வித் துறை வழங்கியிருந்தது.
பொதுவெளியில் ஆய்வு: அந்த வகையில் சவாலில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்த பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் கற்றல் அடைவுத்திறன் ஆய்வு பொதுவெளியில் நடத்தப்பட்டது.
தமிழ், ஆங்கில எழுத்துகள், வாா்த்தைகளை அடையாளம் காணுதல், கட்டுரைகளை பிழையின்றி வாசித்தல், கணிதத்தில் ஒற்றை, இரட்டை எண்களை அடையாளம் காணுதல், கூட்டல், கழித்தல், வகுத்தல் போன்றவை ஆய்வில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு வகுப்புக்கு 5 மாணவா்கள் வீதம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட்டது.
ஏப்.16-இல் 4, 5 வகுப்புகளுக்கு... அடுத்ததாக இந்த சாவலுக்கு அழைப்பு விடுத்த பள்ளிகளில் ஏப். 16-ஆம் தேதி (புதன்கிழமை) 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படவுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை நோக்கி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க இது ஊக்குவிப்பாக அமையும் என பள்ளிக் கல்வித் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.