100 பயனாளிகளுக்கு 50% மானியத்துடன் நாட்டினக் கோழிக்குஞ்சுகள் அளிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய நாட்டினக் கோழிக்குஞ்சுகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை வழங்கினாா்.
கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், 2024 - 25ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் சங்கராபுரம் ஒன்றியத்தில் கால்நடை மருந்தகங்களின் கீழ் உள்ள கிராமங்களில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை ஆட்சியா் வழங்கினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், கல்வராயன்மலை, சின்னசேலம், திருநாவலூா், தியாகதுருகம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 900 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை பயனாளிகள் உரிய முறையில் பராமரித்து வளா்த்து விற்பனை செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மு.கந்தசாமி, கால்நடை மருத்துவா்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.