ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
``103 திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகள்; தார்ப்பாய் மூலம் பாதுகாப்பு'' -அமைச்சர் சக்கரபாணி தகவல்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் இடங்களில் புதிய முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்க தயாராக உள்ளது“ என்றார்.
அதைதொடர்ந்து, தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், “கடந்த 45 மாத கால ஆட்சியில் தமிழகத்தில் புதிதாக 17.50 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 5264 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக உள்ள கோவை மாவட்டத்திற்கு 100 ரேஷன் கடைகள் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2500 முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 639 ரேஷன் கடைகள் மூலம் மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெல் குவின்டாலுக்கு சன்ன ரகத்திற்கு 1960 ரூபாய், பொது ரகத்திற்கு 1905 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் நடவடிக்கையாக கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இது 2450 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் தார்ப்பாய் மூலம் நெல்களை பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நெல்மணி கூட மழையில் நனைந்து வீணாக கூடாது என்பதற்காக நபார்டு வங்கி மூலம் நிதிகள் பெறப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு, 300 சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நெல்கள் மழையில் நனைவது தடுக்கப்படும்.
தமிழகத்தில் 376 அரவை ஆலைகள் மூலம் நெல் அரைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தற்போது 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரேஷன் கடைகள் மூலம் 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவராக கொண்டு ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி வழங்கலாம்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் அரிசி 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், நமது மாநிலத்தில் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால், வெளிமாநிலத்தில் இருந்து அரிசி விலை கொடுத்து வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 100 அமுதம் அங்காடிகள் சீரமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் இரண்டு அமுதம் அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 முதல் ரூ.1500 வரை சேமிப்பு ஏற்படும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 16 KL டீசல் கொள்ளளவு கொண்ட விற்பனை நிலையத்தினை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, செந்தில் பாலாஜி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.