`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
'16 நாட்களுக்குப் பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்; விஜய்யுடன் முக்கிய மீட்டிங்!' - என்ன நடந்தது?
கரூர் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்த தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த், 16 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்திருக்கிறார். நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனையையும் நடத்தியிருக்கிறார். என்ன நடந்தது என்பதைப் பற்றி பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

கரூர் சம்பவத்துக்குப் பிறகு கட்சி மொத்தமாக ஷட் டவுன் ஆகிவிட்டது. சென்னையை சேர்ந்த மா.செக்கள் ஒன்று கூடி காந்தி ஜெயந்திக்கு எங்கே மாலை போடலாம் என ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தனர். விஷயம் தலைமைக்கு தெரிந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட மா.செக்களை தொடர்புகொண்டு தலைமையின் உத்தரவு இல்லாமல் எதையும் செய்யக்கூடாது எனக் கறாராக கூறிவிட்டனர்.
சில மாவட்டங்களில் கரூர் சம்பவத்துக்காக இரங்கல் போஸ்டர் அடிக்கும் வேலைகளிலும் இறங்கியிருந்தனர். அதையும் தலைமையிலிருந்து கூப்பிட்டு தடுத்து நிறுத்தினர். இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கிறோம் நீதிமன்ற தரப்பிலிருந்து பாசிட்டிவான முடிவு வரும் வரை காத்திருங்கள். அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதை கூறுவோம் என்றே மா.செக்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. இடையில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் சிலர் தவெக கொடியோடு கலந்துகொண்ட நிகழ்வும் நடந்திருந்தது. அதற்கும் தவெக பொறுப்பேற்கவில்லை. கரூர் சம்பவத்துக்குப் பிறகு அடுத்தக்கட்ட செயல்பாட்டை நாங்கள் தொடங்கவே இல்லை. அதற்குள் அதிமுக - தவெக கூட்டணி என பேசப்படுவதில் அர்த்தமே இல்லை என்று பனையூர் வட்டாரத்தினர் மறுத்தனர்.

விஜய் மற்றும் தலைமறைவாக இருந்த ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் அத்தனை பேருமே உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காகத்தான் காத்திருந்தனர். விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும் திட்டம் இருந்தது. அதற்காக முதலில் 13 ஆம் தேதியைத்தான் டிக் அடித்து வைத்திருந்தார்கள். அந்த தேதி மாற்றப்பட்டதற்கும் நீதிமன்ற தீர்ப்பு அந்த நாளில் வரக்கூடும் என தகவல் கிடைக்கப்பெற்றதே காரணம் என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள்.
தவெக தரப்பில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தீர்ப்பு நேற்று வெளியானது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு பிறகுதான் தவெக தரப்பு கொஞ்சம் ஆசுவாசமடைந்திருக்கிறது. விஜய்யும் 'நீதி வெல்லும்!' என தொண்டர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார்

இதன்பிறகுதான் தலைமறைவாக இருந்த ஆனந்தும் சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் நீலாங்கரை வீட்டில் விஜய்யை சந்தித்திருக்கின்றனர். திருச்சி, சேலம், புதுச்சேரி என மாறி மாறி தங்கியிருந்த ஆனந்த் நேற்றிரவு 9:15 மணிக்கு விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு வந்திருக்கிறார். 10:30 மணிக்கு சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலம் விசாரிப்புகளை தாண்டியும் சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது.
'நம் கூட்டத்துக்கு வந்து அத்தனை பேர் இறந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் நம்முடைய கையால் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்தால்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை முதலில் பாருங்கள்.' என விஜய் ஆனந்திடம் கூறியதாக விஜய்க்கு நெருக்கமான வட்டத்தினர் கூறுகின்றனர்.

கரூர் குடும்பங்களை சந்திக்க செல்ல ஏற்பாடுகளை செய்ய ஒரு குழு அமைப்பதைப் பற்றியும் ஆனந்த்தும் விஜய்யும் பேசியிருக்கிறார்கள். 'கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் ரொம்பவே உடைந்துவிட்டார். முதலில் அந்த குடும்பங்களை சென்று நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே எண்ணமாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் அனுமதியும் தாமதமானதால்தான் முதலில் வீடியோ காலில் பேசிவிடுவோம் என அந்த குடும்பங்களிடம் பேசினார். அதன்பிறகுதான் விஜய் கொஞ்சம் தேறினார். இப்படியே உடைந்து போய் இருந்துவிடக்கூடாது என்றுதான் தினசரி நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு கிளம்பி வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தால் மட்டுமே அவர் முழுமையாக நிம்மதியடைவார்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

13 ஆம் தேதி கரூர் செல்ல வேண்டுமென திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 17 ஆம் தேதி கரூருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறது விஜய் தரப்பு. பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரே இடத்தில் அழைத்து வைத்து சந்திக்க திட்டமிடுகிறது தவெக தரப்பு. ஆனால், அப்படி ஒரு இடம் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால் இடத்தை இன்னும் லாக் செய்யாமல் இருக்கின்றனர் என்கின்றனர் லோக்கல் தவெக நிர்வாகிகள்.