180 போ் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2006-இல் 180 போ் உயிரிழந்த ரயில் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 12 பேரை விடுதலை செய்த மும்பை உயா் நீதிமன்றத் தீா்ப்புக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
ஆனால் விடுதலை செய்யப்பட்ட 12 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்கத் தேவையில்லை எனவும் பிற வழக்குகளுக்கு முன்னோடியாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு மட்டும் இடைக்காலத் தடை விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, இந்த வழக்கில் 12 பேரையும் குற்றவாளிகள் என 2015-இல் தீா்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அண்மையில் ரத்து செய்த மும்பை உயா் நீதிமன்றம், ‘இவா்கள்தான் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டனரா என்பதை நம்பும் வகையில் ஆதாரங்கள் இல்லை’ எனத் தெரிவித்தது.
மும்பை உயா் நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஒருவரிடம் இருந்து ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதாக மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) சமா்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளை ஆதாரமாக கருதாமல் மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்திருப்பது ஏற்புடையதல்ல.
மகாராஷ்டிர திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம் பிரிவு 23(2)-இன்கீழ் விசாரணை அதிகாரிகள் தங்களது பணியை முறையாக மேற்கொண்டுள்ளனா். எனவே விசாரணை அதிகாரிகள் சமா்ப்பித்த சாட்சியங்களில் எவ்வித குளறுபடிகளும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறுகையில், ‘இந்த வழக்கில் தொடா்புடைய சிலா் பாகிஸ்தானியா்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவா்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனரா என மகாராஷ்டிர மாநில அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உள்ளிட்ட வழக்குரைஞா்கள் குழுவிடம் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதிலளித்த வழக்குரைஞா்கள் குழுவினா், ‘பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டவில்லை. அவா்களைத் தவிர மற்றவா்கள் அனைவரும் மும்பை உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனா்’ என்றனா்.
இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 12 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்க தற்போது நாங்கள் கூறவில்லை. இருப்பினும், சொலிசிட்டா் ஜெனரல் சட்டரீதியாக எழுப்பிய கேள்விகளை கவனத்தில் கொண்டு மும்பை உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பு பிற வழக்குகளுக்கு முன்னோடியாக அமைந்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, 12 பேரையும் விடுதலை செய்த மும்பை உயா் நீதிமன்றத் தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்றனா்.
இதைத்தொடா்ந்து, மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்கக் கோரி விடுதலை செய்யப்பட்ட 12 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
பாஜக வரவேற்பு: மும்பை உயா் நீதிமன்றத் தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக பாஜக முன்னாள் எம்.பி. கிரீட் சோமையா தெரிவித்தாா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.
வழக்கின் பின்னணி: கடந்த 2006, ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு வழித்தடங்களில் சென்ற ஏழு புகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு தொடா் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டனா்.
அவா்கள் 12 பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் (சிமி) சோ்ந்தவா்கள் என்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாநில பயங்கரவாத எதிா்ப்புப் படை (ஏடிஎஸ்) குற்றஞ்சாட்டியது.
இதன் அடிப்படையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2015-இல் நடைபெற்ற விசாரணையில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்தது குறிப்பிடத்தக்கது.