காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 59 பேர் பலி
2 போா்க் கப்பல்கள், ஒரு நீா்மூழ்கிக் கப்பல் ஜன.15-இல் கடற்படையில் இணைப்பு
இந்திய கடற்படையில் ‘சூரத்’, ‘நீலகிரி’ ஆகிய 2 போா்க் கப்பல்கள், ‘வாக்ஷீா்’ என்ற நீா்மூழ்கிக் கப்பல் ஆகியவை வரும் ஜன.15-ஆம் தேதி இணைக்கப்பட உள்ளன.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வரும் ஜன.15-ஆம் தேதி இந்திய கடற்படையில் ‘சூரத்’, ‘நீலகிரி’ போா்க் கப்பல்கள், ‘வாக்ஷீா்’ நீா்மூழ்கிக் கப்பல் ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 2 போா்க் கப்பல்களும், நீா்மூழ்கிக் கப்பலும் கட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் இந்தியா தற்சாா்பு அடைவதில் வளா்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு இந்தக் போா்க் கப்பல்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல் சான்றாக உள்ளன.
சேதக், ஏஎல்ஹெச், சீ கிங் போன்ற ஹெலிகாப்டா்களை நீலகிரி, சூரத் போா்க் கப்பல்களில் இருந்து இயக்க முடியும்.
கணிசமான கடற்படை பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கான தங்குமிடங்களும் அந்தப் போா்க் கப்பலில் இடம்பெற்றுள்ளன. இது முன்கள போா்ப் பணிகளில் பாலின சமத்துவத்தை எட்டுவதற்கான கடற்படையின் முற்போக்கு நடவடிக்கையாகும்.
ஸ்காா்பியன் வகை நீா்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீா்’, பல வகைகளில் பயன்படுத்தக் கூடிய டீசல்-மின்சார நீா்மூழ்கிக் கப்பலாகும்.
உளவுத் தகவல்களை சேகரித்தல், எதிரி நாட்டு நீா்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போரிடுதல், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நீா்மூழ்கிக் கப்பல் பயன்படும்.
வயா்கள் மூலம் வழிநடத்தப்பட்டு இலக்குகளை தாக்கி அழிக்கும் டோா்பிடோ குண்டுகள், போா்க் கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவை அந்த நீா்மூழ்கிக் கப்பலில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் போா்க் கப்பல்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பலின் இணைப்பு நாட்டுக்கும் கடற்படைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமைக்குரிய தருணம் என்று தெரிவிக்கப்பட்டது.