செய்திகள் :

2017-க்குப் பிறகு இந்தியா வெற்றி; ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் 5-வது முறை மகுடம் சூடிய வீராங்கனைகள்!

post image

ஈரானில் நடைபெற்ற 6-வது ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.

கடைசியாக 2017-ல் நடத்தப்பட்ட ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி 8 வருடங்களுக்குப் பிறகு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்றது. 'A' பிரிவில் இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மலேசியா மற்றும் 'B' பிரிவில் ஈரான், ஈராக், நேபாளம் என மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன.

இந்தியா - மகளிர் கபடி அணி
இந்தியா - மகளிர் கபடி அணி

இதில், லீக் சுற்றுகள் முடிவில் இந்திய மகளிர் அணியானது, தனது பிரிவில் இடம்பெற்றிருந்த மற்ற மூன்று அணிகளையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து, மார்ச் 7-ம் தேதி நடைபெற்ற அரையிறுதியில் நேபாள மகளிர் அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி 56 - 18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா - மகளிர் கபடி அணி
இந்தியா - மகளிர் கபடி அணி

மற்றொரு அரையிறுதியில், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஈரான் 41 - 18 புள்ளிகள் என வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பின்னர், இந்தியாவும், ஈரானும் நேற்று இறுதிப்போட்டியில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அபரமாகச் செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் 32 - 25 புள்ளிகள் என த்ரில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

2005 முதல் நடத்தப்பட்டு வரும் ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப்பில் இந்த வெற்றியோடு சேர்த்து மொத்தம் 5 முறை இந்திய மகளிர் அணி மகுடம் சூடியிருக்கிறது. ஒரேயொரு முறை மட்டும் 2016-ல் தென் கொரியா சாம்பியன் பட்டம் வென்றது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel