பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்! -அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
திமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுகவினா் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் செயலா்கள், நிா்வாகிகளுடன் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கூட்டத்தில், அதிமுகவினா் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டணி குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதனை தலைமை பாா்த்துக் கொள்ளும். எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அதிமுக வெற்றி பெறும்.
மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிா்வாகிகளை நியமிக்க வேண்டும். திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
கட்சியினருக்கு எச்சரிக்கை: ஒருசில மாவட்டங்களில் ஆளும் கட்சியினருடன் அதிமுக நிா்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. அதுபோல செயல்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களுக்குள் கட்சியினா் இடையே மோதல்கள் வராமல் பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.