2026-இல் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு டாக்டா் கிருஷ்ணசாமி
எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பாஜகவுடன் ஒன்றிணைந்து 2022 முதல் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றனா். அது தொடருமா? என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வைற்றியடைந்து மீண்டும் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோட்பாட்டு பலத்தால்தான் மகாராஷ்டிரா மஹாயுதி அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டது. இது புரிந்தும் அரசியல் கட்சியினா் மீண்டும் அதே கூட்டணியை தொடரப்போகிறாா்களா? அல்லது தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணிக்கு காங்கிரஸ் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சரியான தருணம் வந்துவிட்டது. அதற்கான அஸ்திரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் ஏற்கெனவே தொடுத்துள்ளாா்.
எனவே, தனிப்பட்ட வெறுப்பு அரசியலை ஒதுக்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.