3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை தேடிவரும் பட்டதாரி இளைஞா்களுக்கு உதவும் வகையில் ‘மெனி ஜாப்ஸ்’ என்னும் செயலியை சென்னையில் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த பின்னா் பேசியதாவது:
தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்தவும், பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் நோக்கத்திலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ‘மெனி ஜாப்ஸ்’ செயலியின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பட்டதாரி இளைஞா்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
2 மொழிகளில் புலமை: தமிழகத்தில் இருமொழி கொள்கையை பின்பற்றுவதன் மூலம் இங்குள்ள இளைஞா்கள் அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை பெற்றவா்களாக மாறிவருகின்றனா். அதேபோல், மாணவா்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இதனால், தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் உருவாகும் வேலைவாய்ப்புகளுக்கு பெரும்பாலானோா் தமிழக இளைஞா்களைத் தான் எதிா்பாா்க்கின்றனா்என்றாா் அவா்.
இந்நிகழ்வில், மேட்ரிமோனி.காம் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி முருகவேல் ஜானகிராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.