`3 நாள்களில் 6000 நடப்பட்ட முடிகள்; டயட்; 14 கிலோ எடைக்குறைப்பு' - `வலிமை' போனி கபூர்
திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தமிழில் வலிமை படத்தை தயாரித்ததன் மூலம் இணையத்தில் படு வைரலானார். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவர் சமீபத்தில் 14 கிலோ உடல் எடையை குறைத்து ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் செய்திருந்தது இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போனி கபூர் ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் செய்துகொண்டது தொடர்பாகப் பகிர்ந்திருக்கிறார். "என் மனைவி ஸ்ரீ தேவி முதலில் உடல் எடையை குறைக்கச் சொன்னார். அதன் பிறகு ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் செய்துகொள்ளலாம் என்றார். அதனால் நான் டயட்டில் ஈடுபட்டு சுமார் 14 கிலோ எடையைக் குறைத்தேன்.
பிறகு, சிலர் என்னிடம் வழுக்கை உள்ளவர்கள் பெரும்பாலும் அதிர்ஷ்டசாலிகள் என்று யாஷ் சோப்ராவை உதாரணம் காட்டிச் சொன்னார்கள். 'யாஷ் சோப்ராவும் வழுக்கையாக இருக்கிறார், ஆனால் பெரிய பணக்காரர்' என்று சொல்வார்கள். அதனால் நான் முடி பற்றி எதுவும் பெரிதாக யோசிக்கவில்லை.
சில வருடங்கள் கழித்து ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். பின் சிகிச்சையையும் செய்துகொண்டேன். மூன்று நாட்களில், கிட்டத்தட்ட 6 ஆயிரம் முடிகளை நட்டுவிட்டார்கள்.
எனது முடியைப் பார்த்த பிறகு, நான் அதை அக்ஷய் கண்ணாவுக்கு கூட பரிந்துரை செய்தேன். நிறைய பேர் வலி அதிகமாக இருக்கும் என்று பயப்படுகிறார்கள், ஆனால் என்னை நம்புங்கள், அது அவ்வளவு மோசமாக ஒன்றும் இருக்காது" என்று கூறியிருக்கிறார்.